புதன், 5 ஆகஸ்ட், 2020

என்ன பட்டம் வழங்கலாம் ?

ஆறுபடைவீடு -
முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு,  மதுரை நக்கீரன் திருமுருகாற்றுப்படை எழுதியுள்ளார்.  இந்நூல் ஆறு பகுதிகளாக மொத்தம் 317 அடிகளைக் கொண்டு ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.   இதன் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பாடப்பெற்றுள்ளன.  

ஆனைமுகத்தான் அருள் - 
முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப்  புலவன் நக்கீரன் அருளிச்செய்த ஆறுபடைவீடுகளுக்கும்,  வலைபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் 20 அடியார்களையும் அழைத்துக் கொண்டு பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகிறார்.  

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகரை வணங்கிக் கொண்டு, பிள்ளையார்பட்டியில் இருந்து தொடங்கி,  பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை என ஆறுபடைவீடுகளுக்கும் ஒரே பயணமாக 60 நாட்களில் 1126 கி.மீ. தொலைவு  பாதயாத்திரையாகச் சென்று வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி சுவாமிஜி அவர்கள் வழிபட்டு வருகிறார்.   2016, 2017, 2018, 2019 ஆகிய நான்கு வருடங்கள் பாதயாத்திரை சிறப்பாக நடைபெற்றுள்ளது.  ஆனைமுகத்தான் திருவருளால் வரவிருக்கும் 2021 மற்றும் 2022 ஆகிய வருடங்களிலும் பாதயாத்திரை நடைபெறவுள்ளது.

பட்டம் வழங்குதல் -
திருக்கயிலாயம் சென்று தரிசித்து வந்தவர்களுக்கு கையிலைமணி என்ற பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர்.  காசிக்குப் பாதயாத்திரை சென்று காசிவிசுவநாதரின் திருவருள் பெற்றவர்களுக்குக் காசிஸ்ரீ பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்கின்றனர்.

கையிலைமணி காசிஸ்ரீ பட்டங்கள் வழங்கப்படுவது போன்று அறுபடைவீடுகளுக்கும் பாதயாத்திரை சென்று ஆறுமுகப்பெருமானின் திருவருள் பெற்றுவரும்  வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களுக்கு என்ன பெயரில் பட்டம் வழங்கலாம்?

அன்பர்கள் அன்புள்ளம் கொண்டு ஆலோசனை வழங்கிட வேண்டும்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக