பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 26ஆவது நாள், ஆனி 19 (03.07.2017) திங்கள் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று கூத்தியார்குண்டு வந்து சேர்ந்தோம்.
இன்று அதிகாலை 3.30 மணிக்குத் திருவேடகம் நோக்கிப் பாதயாத்திரை தொடர்ந்தது. வழக்கம்போல் காலைவழிபாடு முடித்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுப் பாதயாத்திரை செய்தோம்.
விடியும்போது நாகமலையைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். அதன் பின்னர் எங்களது பயணம் முழுவதும் வைகை ஆற்றங்கரையில் நடந்தது. மரங்கள் நிறைந்து குளிர்ச்சியாக இருந்தது.
வழியில் கீழமாத்தூர் அருகே 7.10க்கு மணிக்கு சாலையோரம் உள்ள கோயில் வளாகத்தில் சிறிது நேரம் தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம்.
காலை மணி 9.00 அளவில் ஆற்றுப்பாலம் அருகே சாலையோரம் உள்ள ஸ்ரீ அருள்மிகு மாலையம்மன் கோயில் வளாகத்தில் அமர்ந்து காலை உணவு. இத்தனை நாட்களும் வெயிலில் நடந்து வந்து எங்களுக்கு இந்த இடம் சொர்க்கம் போன்று இருந்தது.
வைகை ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாதுவென்ற விநாயகர்கோயிலை வணங்கிக் கொண்டு, அருகில் உள்ள திருஞானசம்பந்தர் சந்நிதியையும் வணங்கிக் கொண்டோம். மதுரையில் வைகை ஆற்றில் விடப்பெற்ற திருஞானசம்பந்தரின் ஏடுகள் ஆற்றை எதிர்த்துச் சென்று கரை யேறிய இடம் இது. இன்று தமிழகத்தில் சைவம் தழைத்தோங்கிடக் காரணமான இந்தப் புனிதமான இடத்தை வலம் வந்து அனைவரும் வணங்கிக் கொண்டோம்.
காலை 9.50 மணிக்கு திருவேடகம் சொக்கலிங்கம் சுவாமிகள் மடம் வந்து சேர்ந்தோம் . ஊரார் வந்து நின்று வரவேற்று உபசரித்தனர்.
மதிய உணவு.
ஓய்வு.
தேவகோட்டை பழ.இராம.பழ. சோமசுந்தரம் செட்டியார் (இருப்பு - மதுரை) அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து மாலைநேரம் யாத்திரிகர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து வைத்தார்.
மாலை மணி 6.00 அளவில் அருள்மிகு ஏலவார்குழலி உடனாய திரு ஏடகநாதர் ஆலயம் சென்று வழிபாடு செய்தோம். அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனி இராஜகோபுரங்கள். சமணரோடு திருஞானசம்பந்தப் பெருமுன் புனல்வாதம் செய்தபோது வைகையில் இட்ட பாடல்கள் ஆற்றை எதிர்த்துச் சென்று கரை ஒதுங்கிய இடம் திருவேடகம். ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று “ஏடு எதிர் ஏறிய விழா” சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
கோயிலில் வழிபாடு முடிந்தவுடன், அருகில் உள்ள அடியார் வீட்டில் வரவேற்புக் கொடுத்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தக் குடும்பத்தினரை ஆசிர்வதித்தார்.
ஓய்வு.
https://goo.gl/maps/cWvC7q45UigSQkfR9
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக