புதன், 8 ஜூலை, 2020

09.07.2014 காசி பாதயாத்திரை - 45ஆம் நாள் - ஆனி 25

பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 45ஆம் நாள் - ஆனி 25 (09.07.2014) புதன் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில்  பாமிடி பாண்டுரங்கன் விட்டலர் கோயிலுக்கு வந்து தங்கியிருந்தோம்.  
நேற்று இரண்டாம் நாள் திருவிழா.
இன்று மூன்றாம் நாள் திருவிழா.

கோயில் கல்யாண மண்டபத்திலேயே இன்றும் தங்கி இருந்தோம்
முழு ஓய்வு.

கோயிலில் வழிபாடு செய்துகொண்டோம்.
திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கோயிலின் இராஜகோபுர நுழைவாயில் திருமாலின் பத்து அவதாரங்களையும் சிற்பமாகச் செதுக்கியிருந்தனர். நிலையின் உச்சியில் அனந்தசயணப் பெருமாளின் சிற்பம் சிறியஅளவில் இருந்தது.





துவார பாலகர், ஆஞ்சனேயர், கருடன் முதலான திருமூர்த்தங்களும் அருமையாகத் தத்ரூபமாக இருந்தன.


கோயிலின் உள்ளே நாகவழிபாடு சிற்பங்கள் இருந்தன.
காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களும், காசிஸ்ரீ சண்முகவேலு அவர்களும் சேர்ந்து படம் எடுத்துக் கொண்டனர்.

மதியம் சாப்பிட காசிஸ்ரீ சிவப்பா மட்டும் வராமல்,  நன்றாகப் போர்வையைப் பொத்திப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.  மற்றபிற யாத்திரிகர்கள் சாப்பிடக் கூப்பிட்டபோது,  முகத்தை மூடியிருந்த போர்வையைச் சிறிது விலக்கி, நீங்கள் போய்ச் சாப்பிடுங்கள்.  எனக்குச் சாப்பாடு வேண்டாம் என்று படுத்துக் கொண்டார்.   சிவப்பாவைத் தவிர நாங்கள் எல்லோரும் மதியம் சாப்பிட்டு முடித்து வந்து, சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது நான் சிவப்பா அருகில் சென்று,  யாத்திரையின்போது பட்டினியாய் இருக்காதே என்று சொல்லி, அவரது கையைப் பிடித்துத் தூக்கினேன்.  அவரது உடல் நெருப்பாய்க் கொதித்தது.  அதிகமான காய்ச்சல்.  உடனடியாகக் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் தகவல் சொல்லி, காய்ச்சல் மாத்திரை கொடுத்துச் சாப்பிடச் சொன்னோம்.   மாத்திரை சாப்பிட்டு விட்டு மீண்டும் பொத்திக் கொண்டு படுத்துவிட்டார்.

மாலை நேரம் ரொட்டி தேநீர்.
சிவப்பாவின் காய்ச்சல் குறையவில்லை.
காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் சிவப்பாவிடம் தெலுங்கில் பேசினார்.  மருத்துவரிடம் சென்று காண்பித்தால் நல்லது என்று தோன்றியது. குருசாமி அவர்களிடம் சொல்லிக் கொண்டு, தனசேகரன் அவர்கள் சிவப்பாவை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டி வைத்தியம் பார்த்து அழைத்து வந்தார்.

இரவு உணவு.  சிவப்பா சிறிதளவே சாப்பிட்டார்.

மூன்றாம் நாள் திருவிழாவில் இன்றைய இரவு பஜனையில் யாத்திரிகர் சிலரும் கலந்து கொண்டனர்.

ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக