சனி, 18 ஜூலை, 2020

19.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை 42 ஆவது நாள், ஆடி 3

அறுபடைவீடு பாதயாத்திரை - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று  42 ஆவது நாள், ஆடி 3 ( 19.07.2017) புதன் கிழமை.

காலை 2,30 மணிக்குத் புதுச் சத்திரம் அருள்மிகு முனீசுவரர் கோயிலில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டது.

கிளம்பிய சற்று நேரத்திலேயே சாலையின் இருமருங்கிலும் இருந்த வயல் வெளிகளில் இருந்து மயில்கள் அகவல் கேட்டுக் கொண்டே இருந்தது.  பொழுது விடிந்தவுடன் மயில்களின் நடமாட்டத்தைக் கூட்டங்கூட்டமாகக் காண முடிந்தது.




திருவையாறு 3 கி.மீ. இருக்கும்போது,  சாலையோரம் அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தோம்.

தில்லைஸ்தானம்  அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் வாயிலில் நின்று கோபுரத்தை வழிபாடு செய்து கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
கோயில்வாயில் அருகே மூங்கிலால் ஏணிகளும் கூடைகளும் செய்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.  இது பர்மா வாழ் தமிழர்களை நினைவூட்டியது.  பர்மாவில் மூங்கிலால் வீடுகள் கட்டி வசிக்கின்றனர்.  மேலும் தலையில் வைத்துக் கொள்ளும் தொப்பி முதற்கொண்டு படுக்கும் பாய் முதற்கொண்டு பயன்படுத்தும் அனைத்தும் மூங்கிலால் செய்யப் பெற்றனவாக இருக்கும்.


வழியில் ஸ்ரீலஸ்ரீ தாம்பூலசித்தர் சீவசமாதியை வணங்கிக் கொண்டு, பேருந்துநிலையம் எதிரே உள்ள காலை மணி 7.20 க்கு திருவையாறு நடராசர் திருமண மண்டபத்தை அடைந்தோம்.  மண்டபத்தை ஒட்டியுள்ள சி.நா.சத்திரம் – கருத்தான் செட்டியார் மடத்தில் தங்கினோம்.

இந்த மடத்தை மதுரையில் வசிக்கும் தேவகோட்டை உயர்திரு. பழ.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

இந்த மடத்தை வலையபட்டியைச் சேர்ந்த திரு.சேதுராமன் செட்டியார் அவர்கள் மேற்பார்வை செய்து வருகிறார்.  சி.நா.அன்னசத்திரமானது, திருவையாற்றில் ஆனந்த நடராசர் பூசையும் , வேதியர் சாதுக்களுக்கு அன்னதானம் நடத்துவதற்காகவும் நாட்டுக்கோட்டை நகரத்தார் – நேமம் கோயில் காரைக்குடி ‘கருத்தான் செட்டியார் வீடு‘ நா.நா.நா.க. குடும்பத்தாரால் 1870ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.
9.00 மணிக்குக் காலை உணவு.
ஓய்வு.
மதிய உணவு.




மாலை  5.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் அடியார் அனைவரும் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனமர் ஐயாறப்பன் சந்நிதிக்கும் சென்று வழிபட்டோம்.  


கோயிலில் ஒவ்வொரு சந்நிதிக்கும் அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்வித்தனர்.  அருள்மிகு ஸ்ரீ வில்லேந்திய வேலவர் சந்நிதியில்  வழிபாடு செய்துகொண்டோம்.
வழிபாடு முடிந்து சத்திரம் திரும்பும் போது கோயிலின் மேற்குக் கோபுரத்திற்கு எதிரில் உள்ள தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணமாலை கல்லூரி உரிமையாளர்களுக்குச் சொந்தமான மேலமடத்தில் யாத்திரிகர்களை வரவேற்றனர்.  அங்கு மடத்தின் நிர்வாகி திரு. மாணிக்கவாசகம் செட்டியார் அவர்கள், குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு மாலை மரியாதை செய்தார்கள்.  யாத்திரிகர்கள் அனைவருக்கும் அந்த ஊரில் புகழ்பெற்று விளங்கும் அல்வா மிக்சர் வாங்கிக் கொடுத்து உபசரித்தனர்.


சத்திரம் வந்து இரவுப் பிரார்த்தனை.
உணவு.
ஓய்வு 

https://goo.gl/maps/Ebst4fZzdU9gzD5p9
இன்றைய பயணம் சுமார் 18 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக