அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயிலில் வழிபாடு செய்து கொண்டு, சிதம்பரம் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 49 ஆவது நாள், ஆடி 10 ( 26.07.2017) புதன் கிழமை.
அதிகாலை 3.00 மணிக்கு சிதம்பரத்தில் உள்ள காவேரி மண்டபத்தில் இருந்து யாத்திரை தொடங்கியது.
காலை மணி 6.00 அளவில் புதுச்சத்திரத்திற்குச் சற்று முன்னதாகச் சாலையோரம் யாத்திரிகர் அனைவரும் ஓய்வு எடுத்தோம். அன்னதான வண்டி வருவதற்குச் சிறிது நேரம் ஆகும் என்பதால் தொடர்ந்து நடந்து, புதுச்சத்திரம் சென்று,
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அடுத்துச் சாலையோரம் உள்ள ஒரு கடை வாசலில் தங்கியிருந்தோம். காலை மணி 7.00க்கு அன்னதான வண்டி வந்தவுடன் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
“சிலம்பி மங்களம்” வழியாகச் செல்லும்போது “சிலம்பியம்மனை” நினைந்து வணங்கிக் கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
காலை மணி 8.35 அளவில், மேட்டுப்பாளையத்தில் சாலையோரம் உள்ள ஐயனார் கோயிலில் அமர்ந்து காலை உணவு. கோயில் வளாகத்தில் கூகைமுத்தி மரம் ஒன்று இருந்தது.
காலை மணி 9.10 அளவில் ஆணையம்பேட்டை ஊரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம்.
தோன் பாஸ்கோ பள்ளிக்கூடத்திற்கு எதிராக உள்ள நெல்வயலில் மின்மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. யாத்திரிகள் பலரும் சென்று குளித்து மகிழ்ந்தனர். கரம்பை மண்ணை எடுத்து உடலெங்கும் பூசிக்கொண்டு சிறிது நேரம் சென்று குளிக்கலாம் எனக் காத்திருந்தேன். ஆனால் சிறிது நேரத்தில் மின்வெட்டு. தண்ணீர் வருவது நின்றுவிட்டது.
நகரத்தார் இருவர் வந்து யாத்திரிகர்களை வரவேற்றனர். யாத்திரிகர்கள் தங்குவதற்கு என இரண்டு வகுப்பறைகளை ஒதுக்கிக் கொடுத்தனர்.
“கடலூர் பாறைகள்” என்று சொல்லப்படும் பாறைகளின் சிதைந்த பாகங்கள் சாலைகளின் இருபுறங்களிலும் நிறையக் கிடந்தன. இந்த வகைப் பாறைகள் கடல்கோளின் போது, கடல்வெள்ளம் (சுனாமி) கரையைக் கடந்தபோது, கடலின் அடிப்பகுதியில் கிடந்த களிமண்ணானது கரைக்கு வந்து சேர்ந்துள்ளது. இவ்வாறு கடற்களிமண்ணும் நிலப்பகுதியில் இருந்த மண்ணும் மணலும் சேர்ந்து இதுபோன்று “கடலூர் பாறைகள்” உருவாகியுள்ளன என்பது எனது கருத்து. https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/03/cuddalore-rocks-theory-of-tsunamis.html
https://goo.gl/maps/ppwupbvmaaBfBjjd8
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக