காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை -
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 43ஆம் நாள் - ஆனி 23 (07.07.2014) திங்கள் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில் மரூரு வந்து தங்கியிருந்தோம்.
இன்று காலை 3.25 மணிக்கு காலை வழிபாடை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு மரூரில் இருந்து புறப்பட்டோம்.
6.21 am
வழியில் 8.30க்கு அனந்தபூர் சுற்றுச்சாலையில் காலை உணவு.
காலையில் இருந்தே கடுமையான வெயில். ராப்தாடு என்ற ஊரின் வழியாக இஸ்கான் அருகில் உள்ள சோமலதொட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு 11.10 க்கு வந்து சேர்ந்தோம்.
மதிய உணவு
ஓய்வு.
11.15 am
அதிகாலை 3.15 முதல் 11.15 முடிய 8மணிநேரம் தொடர்ந்து வேகாதவெயிலில் நடைப்பயணம். வேகமாக நடக்கும் சில யாத்திரிகர்கள் காலை மணி 10.30 அளவிலேயே வந்து சேர்ந்துவிட்டதாகத் தெரிவித்தனர். காலை நேரம் ஏறு வெயிலில் நடந்து வந்த காரணத்தினால் யாத்திரிகர் அனைவரும் களைத்துப் போயிருந்தனர்.
மரத்தின் கிளையில் கடுவன் (ஆண் குரங்கு) ஒன்று ஒய்யாரமாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.
மாலைநேரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு. இங்கு மாலை 6.00 மணி முதல் இரவு 9.30 வரை மின்தடை. மாலைநேரம் வழிபாடு முடித்த சிறிது நேரத்திற் கெல்லாம் அன்னதான வண்டியின் ஓட்டுநர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் வந்து, வண்டியின் ஆக்சிலேட்டர் வேலை செய்யவில்லை என்றும், இப்படியே வண்டியை ஓட்ட முடியாது என்றும் கூறினார். குருசாமி அவர்களும் ஊருக்குள் சென்று பழுதுநீக்குவதற்கான ஆட்களை அழைத்து வரும்படிச் சொன்னார். அவர்களும் வந்து, வண்டியின் பேணட்டைத் திருப்பிவைத்துக் கொண்டு புதிதாக ஒரு ஆக்சிலேட்டர் கேபிளை மாட்டினர். வண்டி இப்போது நன்றாக இயங்கியது. இதற்குப் பின்னர் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்கச் சென்றனர்.
ஆனால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மட்டும் தூங்காமல் இருந்து, ஓட்டுநரையும் அழைத்துக் கொண்டு, வண்டி இருக்கும் இடத்திற்குச் சென்று வண்டியை வெளியே எடுக்கச் சொன்னார். ஓட்டுநரும் வண்டி நன்றாக ஓடுகிறது, வெளியில் எடுக்கத் தேவையில்லை என்று கூறி, வண்டியின் எஞ்சினை மட்டும் இயக்கிக் காண்பித்தார். நன்றாய் இருந்தால் சரிதான் என்று கூறிக்கொண்டே குருசாமி அவர்களும் வந்து படுத்துத் தூக்கிவிட்டார்.
ஓய்வு.
https://goo.gl/maps/Kx59tBLVCKd6Jvaw7
இன்றைய பயணம் சுமார் 29 கி.மீ .
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக