புதன், 15 ஜூலை, 2020

16.07.2014 காசி புனித பாதயாத்திரை - 52ஆம் நாள் - ஆனி 32

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 52ஆம் நாள் - ஆனி 32 (16.07.2014) புதன் கிழமை.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று கிருஷ்ணா நதியின் தென்கரையில் ஆற்றங்கரையோரம் உள்ள ஸ்ரீராமர் கோயிலிலுக்கு வந்து சேர்ந்து தங்கியுள்ளோம்.


கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையில் கோயில் உள்ளது.  மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் கோயில் உள்ளது.  அமாவாசை முதலான விஷேட நாட்களில் மிகமிக அதிகமாகக் கூட்டம் இருக்குமாம்.  நாங்கள் சென்றிருந்த நாட்களில் கூட்டம் இல்லை.  ஆற்றங்கரையில் சுமார் 50 பேருக்கு மேல் இருந்தனர், கூட்டம் இல்லை.  

கிருஷ்ணா நதிக்கரையில் படித்துறைகள் மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பெற்றிருந்தன.   மிகவும் ஆழமான நதியாக இருந்தது.   


கிருஷ்ணாநதி மேல்ப்பாலம் மிகவும் உயரமாகக் கட்டப்பெற்றிருந்தது.  பாலத்திற்கு மேற்குப் பகுதியில் ஆற்றின் தென்கரையில் கோயில் உள்ளது.
பாலத்திற்குக் கிழக்கே ஆற்றின் நடுவே மிகச் சிறிய குன்று ஒன்றும், அதன் மேல் கோட்டை ஒன்றும் இருந்தது. 

ஆற்றின் கரையில் கலைவாணி, நாகர், மற்றும் பூதேவி ஸ்ரீதேவி உடனாய திருமால் ஆகிய தெய்வங்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.





குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் யாரேனும் தலைமுடி யெடுத்துக் கொள்வதாய் இருந்தால், முடி இறக்கிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.  எனது தந்தையின் பெயர் கிருஷ்ணன் . எனவே பீச்பள்ளி, கிருஷ்ணா நதியின் கரையில் தந்தையை நினைந்து தலைமுடி காணிக்கை செலுத்திட விருப்பம் தெரிவித்தேன்.  குருசாமி அவர்களும் ஆசிவழங்கினார்.  மற்றும் சில யாத்திரிகர்களும் முடி இறக்கிக்கொள்ள வந்தனர்.  எல்லோரும் ஆற்றங்கரைக்குச் சென்றோம்.  ஆற்றின் கரை ஓரமாகத் தெளிவான தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.  இருந்தாலும் இடுப்பளவிற்கு ஆழம் இருந்தது.   தனியாகச் சென்று யாரும் குளிக்கக்கூடாது என்று கூறி, இரண்டு குழுக்களாகப் பிரித்துக் குளிக்கச் சொன்னார். 

மற்றவர்கள் குளிக்கும்போது நான் கரையோரம் இருந்த தெய்வங்களைப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.  அதில் மிகவும் பழையான நடுகல் போன்று ஒருகல் தெரிந்தது.  சென்று பார்த்தால், அதில் ஒரு பழமையான பிள்ளையார் சிற்பம் இருந்தது. எழுத்துகள் ஏதும் இல்லை.


நான் அந்தப் பிள்ளையார் இருந்த கல்லின் அருகே நின்று கொண்டிருந்தேன்.  
மற்றவர்கள் யாரும் அந்தப் பிள்ளையாரைக் கண்டுகொள்ள வில்லை.

காட்சியருளிய கணேசர் - 
ஆற்றின் கரையோரம் நாவிதர் முடி இறக்கிவிட்டார்.  எல்லோருக்கும் முடி இறக்கிக் கொண்ட பின்னர், கடைசியாகக் குருசாமி பச்சைக்காவடி அவர்களும் முடிஇறக்கிக் கொள்ள உட்கார்ந்தார். அப்போது எங்களை மட்டும் தன்னுடன் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை அறைக்குச் சென்றுவிடுமாறு கூறினார். எனவே நாங்கள் சிலர் மட்டும் குருசாமி அருகே நின்று கொண்டிருந்தோம்.  குருசாமியின் தலைமுடியை இறக்குவதற்கு நாவிதர் தயாரானபோது, குருசாமி அவர்கள் “ஆனைமுகத்தான் திருவடி போற்றி, உப்பிலியப்பன் திருவடி போற்றி” எனச் சொல்லி வணங்கிக் கொண்டார். 
பிள்ளையாரைக் கும்பிடுகிறார் என்பதால் பிள்ளையார் அருகில் நின்று கொண்டிருந்த நானும் உடனே சற்று விலகி நிற்றேன்.  இப்போது குருசாமி அவர்களுக்கு நேர் எதிரே அந்தப் பழமையான பிள்ளையார் காட்சி அருளினார்.   அவ்வளவுதான் குருசாமி  அவர்கள் பெரிதும் வியந்து மகிழ்ந்து போனார்.    அந்தப் பிள்ளையார் அந்த இடத்தில் இருந்ததை நான் ஏற்கனவே பார்த்துவிட்ட காரணத்தினால் எனக்கு இது ஒன்றும் அற்புதமாகத் தெரியவில்லை.  ஆனால், கிருஷ்ணாநதிக்கரையில் முடி இறக்கும் முன்பு, தான் வேண்டிக்கொண்டவுடன் தனக்கு முன் தோன்றிப் பிள்ளையார்  காட்சி அருளிச் செய்துவிட்டார் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மிகவும் மனம் நெகிழ்ந்து உருகிப் போனார். 

முடிஇறக்கிவிட்டு ஆற்றில் இறங்கிக் குளித்தோம்.  ஆற்றில் மணல் இல்லை.  பெரிய பெரிய உருண்டைக் கற்களாக ஆறுமுழுவதும் கிடந்தன.  ஆற்று நீரில் குளிக்கும் போது,  உடல் எங்கும் மீன்கள் கடித்தன.  குறிப்பாகக் கால் நகங்களை மீன்கள் கடித்துக் கொண்டே இருந்தன.  மீன்கடிக்குப் பயந்தே வெகுவிரைவாகவே குளித்து எழுந்தோம்.  

மொட்டையும் உத்திராட்சக் கொட்டையும் - 
யாத்திரையின் போது, 15.06.2014 அன்று, சிவசக்தி பீடம் திரு மேகநாதன் அவர்கள் யாத்திரிகர் ஒவ்வொருவருக்கும் ஓர் உத்திராட்சம் கொடுத்துச் சிறப்புச் செய்தார்.  அவர் கொடுத்த உத்திராட்சம் அப்படியே இருந்தது. அதை யெடுத்து, அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களிடம் கொடுத்து கழுத்தில் அணிந்து கொண்டேன்.  கிருஷ்ணா நதிக்கரையில், எனது தந்தை கிருஷ்ணன் அவர்களை நினைந்து முடியிறக்கிக் கொண்டு,  முதன்முதலாக உத்திராட்சம் அணிந்து கொண்டேன்.  நானே நானா? என்று எனக்கே எனது படத்தைப் பார்த்து வியப்பாக இருந்தது.
யாத்திரிகர் பலரும் கோயில் வளாகத்தில் நின்று படம் எடுத்துக் கொண்டோம்.





அன்னதான வண்டியின் ஓட்டுநர் அவர்களும் வண்டியின் அருகே நின்று படம்   எடுத்துக் கொண்டார்.

மாலைநேரம் கோயிலில் யாத்திரிகர் அனைவரும் வழிபாடு செய்து கொண்டோம். இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறோம் என்ற விபரம் அறிந்த அர்ச்சர் பெரிதும் மகிழ்ந்தார்.  எங்களுக்காகச் சிறப்பு வழிபாடு செய்து வைத்தார்.

இன்று ஓய்வு நாள்.  அதனால் அனைவரும் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்தோம்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக