குணம் என்னும் குன்றேறி நின்ற குருசாமி
காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை
நேற்று துப்ரான் என்ற ஊருக்கு வந்து தங்கி இருந்தோம்.
இன்று 63ஆம் நாள் - ஆடி 11 (27.07.2014) ஞாயிற்றுக் கிழமை.
துப்ரானில் இருந்து புறப்பட்டு நரசிங்கி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து, இங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கியிருந்தோம்.
மாலைநேர வழிபாட்டிற்குப் பின்னால், குருசாமியின் முகம் சற்று வாட்டமாகக் காணப்பட்டது. சற்று கோபமாகவும் இருந்தார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இப்படிக் கோபமாக இருந்ததை அன்றுதான் நான் முதன்முறையாகப் பார்த்தேன்.
ஏன் இந்தக் கோபம்?
எதற்காக இந்த முகவாட்டம்?
யார் என்ன செய்தார்?
யார் என்ன சொன்னார்? என்று தெரியவில்லை.
ஆனால், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவருக்கு முன்னால் இருந்த ஒரு காங்கிரிட் தூணை வெறித்துப் பார்த்த படி இருந்தார்.
அவ்வளவு வருத்தத்திலும் கோபத்திலும், யாத்திரிகர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் சொல்லாமல், யாத்திரிகர் யாருடைய முகத்தையும் பார்க்காமல், “இந்த யாத்திரையானது மிகவும் புனிதமானது, இதை நான் நடத்தவில்லை, இதைப் பிள்ளையார் நடத்துகிறார், யாத்திரையில் நடக்கும் ஒவ்வொவரையும் பிள்ளையார் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார், யாத்திரிகர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், என்னால் இயன்ற அளவிற்கு நல்லபடியாகச் செய்து கொடுத்து வருகிறேன், அன்னதான வண்டியில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் உள்ள பிள்ளையார் நடப்பதை யெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறார்” என்று சொன்னார்.
அவ்வளவுதான், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எந்தத் தூணைப் பார்த்தபடி இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாரோ, அந்தத் தூணில் கட்டப்பட்டிருந்த மின்சார பல்ப் அப்படியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. குருசாமியின் கோபச் சொற்கள் குண்டுபல்லை எரித்து விட்டன.
இது போன்ற நிகழ்ச்சிகளை நான் தமிழ்ச் சினிமாக்களில்தான் பார்த்துள்ளேன். இப்போது முதன்முறையாக நேரில் பார்த்து வியந்து பயந்து போனேன். சற்றே சுதாரித்துக் கொண்டு, தீப்பிடித்து எரியும் பல்ப் சுவிட்சை அனைத்தோம். காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் எரிந்துபோன அந்த பல்ப், ஹோல்டர், வயர் எல்லாவற்றையும் வெட்டி எடுத்து விட்டுப் புதிதாக மின்சார பல்ப் ஒன்றை மாற்றினார். யாத்திரிகர் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு வியந்து பயந்து, புதிய மின்விளக்கு ஒளியில் மிகவும் அமைதியாக அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தனர்.
“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது”
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:29). என்ற திருக்குறளுக்குப் பொருள் சேர்ப்பதாய் நிகழ்ந்தது இந்த நிகழ்ச்சி)
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக