திங்கள், 13 ஜூலை, 2020

14.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 37 ஆவது நாள், ஆனி 30

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப் பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....

இன்று  37 ஆவது நாள், ஆனி 30 ( 14.07.2017) வெள்ளிக் கிழமை.
மணப்பாறை நகரத்தார் மண்டபத்தில் இருந்து அதிகாலை  மணி  2.30க்கு வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.


வழியில் அகிலஇந்திய வானொலி ஒலிபரப்பு நிலையம் (All India Radio ) அருகே ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.


அருள்மிகு மணிவேல் முருகன் திருக்கோயிலுக்குக் காலை மணி 8.00 க்கு வந்து சேர்ந்தோம்.  கடந்த வருடம் வரும்போது பூமிபூஜை செய்து வானம் தோண்டி யிருந்தார்கள்.  இந்த வருடம் வரும்போது கோயில் கட்டிக் குடமுழுக்கு நடைபெற்று இருந்தது.  கோயில் அற்புதமாக இருந்தது.

திருக்கோயில் உருவான வரலாறு -
தைப்பூசத்திருவிழாவிற்கு பழநிக்குச் செல்லும் பாதயாத்திரையர்கள் தாக சாந்திக்காக 01.02.1990 ஆண்டு முதல் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த இடம் தெய்வாம்சம் பொருந்தியுள்ளதாகவும், இந்த இடத்தில் வேல் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யுமாறு சான்றோர்களும், பெரியோர்களும் கூறியபடியால் 1993 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆலயம் அமைத்து மணி வேல் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடைபெற்று வந்தன.  பின் 1998 ஆம் ஆண்டு பிள்ளையார், பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் தொடர்ந்தன.
அதன் தொடர்ச்சியாக பொது மக்களின் விருப்பத்தின்படி திருமணங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.  இங்கு நடைபெறும் திருமணங்கள் வாழ்க்கை வளமானதாகவும், வெகுவிரைவில் குழந்தை பேறுகள் அமைவது இக்கோயில் தனிச்சிறப்பு.  மேலும் இந்த இடத்தில் அரசும் வேம்பும் பின்னிப்பிணைந்து வளர்ந்ததால் 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது.  நாகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   இங்கு வரும் பக்தர்கள் தங்களது குறைகளை பிரார்த்தனை சீட்டு எழுதி மணிவேலில் கட்டினால் மணிவேல் முருகன் அக்குறைகளை நிவர்த்தி செய்வதாக அருளியுள்ளார். இந்த ஆலயம் அமைக்க நீண்ட கால எண்ணத்தின்படி அதன் தொடர்ச்சியாக 2016ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஸ்ரீ மணிவேல் முருகன் அன்னதான அறக்கட்டளை அமைக்கப்பட்டு இறையருளால் பூமிபூஜை செய்யப்பட்டு தற்போது ஆலயம் உருவாகி 06.07.2017 அன்று மஹா கும்பாபிஷேகம் பக்தர்களின் ஆதரவோடும் துணையோடும் சிறப்பாக நடைபெற்றது.  (கோயிலில் உள்ள தகலின்படி)


தேவசேனா வள்ளி சமேதராய் ஆறுமுகன் மயில்வாகனத்தில் வீற்றிருந்து அருள் பாலித்தார்.  காலைநேர அபிஷேகம் முடிந்து அலங்கார பூஜை நடந்துகொண்டிருந்தது.  யாத்திரிகர்கள் அதில் கலந்து கொண்டு தரிசித்து சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல் பிரசாதம் பெற்று அருந்தினோம்.  
பிறகு காலைச் சிற்றுண்டி.
ஓய்வு.
மதிய உணவுக்கான காய்கறிகள் அடியார் ஒருவர் உபயமாக வழங்கிச் சிறப்பித்தார்
மதிய உணவு.
ஓய்வு.
மாலை மணி 5.00க்கு மணிவேல்முருகன் கோயிலில் மண்டலபூஜை.  யாத்திரிகர் அனைவரும் கலந்து கொண்டனர்.  யாககுண்டம் அமைத்து மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.  அபிஷேகமும் அலங்காரமும் அற்புதக் காட்சி. விபூதி, குங்குமம் பிரசாதம் அபிஷேகப்பால், பஞ்சாமிர்தம், சர்க்கரைப் பொங்கல் மற்றும் குலோப்ஜாம் வழங்கப்பட்டன.
இரவு உணவு.
ஓய்வு.

https://goo.gl/maps/2LUbUbp1P2CscD4TA
இன்றைய பயணம் சுமார் 22 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக