2015 காசி பாதயாத்திரை (17.07.2015)
கடந்த 2014ஆம் ஆண்டு இராமேச்சுரத்திலிருந்து காசிக்கு பாதயாத்திரை சென்றுவந்தது போல் இந்த 2015ஆம் வருடமும் காசிக்குப் பாதயாத்திரை செல்ல வேண்டும் என்று எனக்கு விருப்பம். ஆனால் எனது சொந்து சூழ்நிலையின் காரணத்தினால் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் 2015ஆம் வருட காசியாத்திரைக்கு எனது பெயரைப் பதிவு செய்து கொள்ள இயலாமல் போனது.
ஆனாலும், காசிக்கு இந்த வருடமும் பாதயாத்திரை சென்று வர வேண்டும் என்ற எனது விருப்பமும் நீங்கவில்லை.
ஆசை யாரை விட்டது -
காசிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் குருசாமி அவர்களிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து யாத்திரிகர்களுடன் இணைந்து கொள்ள விரும்பினேன்.
ஆசை யாரை விட்டது -
காசிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருக்கும் குருசாமி அவர்களிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து யாத்திரிகர்களுடன் இணைந்து கொள்ள விரும்பினேன்.
ஆனால் குருசாமி அவர்கள் யாதொரு காரணத்தைக் கொண்டும் பாதயாத்திரையின் இடையில் நின்று விட்டவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வதில்லை. மேலும் யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதும் புதிதாக யாரையும் இடையில் சேர்த்துக் கொள்வதுமில்லை. எனவே என்ன செய்யலாம் என்று ஒரே யோசனை. யோசனை மேல் யோசனை. முடிவாக ஒரு விடை கிடைத்தது.
(படம் - 16.11.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் 2015ஆம் வருடத்திற்கான காசிபாதயாத்திரை பயணத்திட்டத்தைத் தயார் செய்து கொண்டிருந்த போது)
யாத்திரையில் தானே இடையில் சேரக்கூடாது.
தொண்டூழியம் எந்த இடத்திலும் செய்யலாமல்லவா!
யாத்திரிகர்களும் சமையல்காரர்களும் நெடுந்தொலைவு பயணம் செய்து நாக்பூர் செல்லும் போது மிகவும் களைத்திருப்பர். எனவே, “நான் காரைக்குடியிலிருந்து நாக்பூருக்குத் தொடர்வண்டியில் வந்து, அங்கிருந்து காசிவரை யாத்திரிகர்களுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டே வருகிறேன்” என்று எனது விருப்பத்தைக் குருசாமியிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.
குருசாமி அவர்களும் எனது விருப்பம் அறிந்து மிகவும் மகிழ்ந்து, “வாப்பா, நல்லாவா“ என்று கூறி ஆசிர்வதித்தார்.
அதன்படி,
ஆடி 1 (17.07.2015) வெள்ளிக்கிழமை இன்று காலை காரைக்குடி - நாக்பூர் பயணம்.
ஆடி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் யாத்திரிகர்கள் நாக்பூரில் தங்கி இருப்பார்கள்.
ஆடி 5 (21.07.2015) செவ்வாய்கிழமை அதிகாலை - குருசாமி மற்றும் யாத்திரிகர்களுக்குத் தொண்டூழியம் செய்து கொண்டே, நாக்பூரிலிருந்து காசிக்கு பாத யாத்திரை மேற்கொள்கிறேன்.
24.08.2015 காசி மாநகரை அடைவோம்.
30.08.2015 காசியிலிருந்து இராமேச்சுரம் தொடர்வண்டிப் பயணம்.
தெய்வ வழிபாடுகளை முடித்துக் கொண்டு 10.09.2015 முதல் இயல்புநிலைக்கு வருவேன்.
பயண அனுபவங்களை அவ்வப்போது பதிவு செய்கிறேன்.
எனது காசி பாதயாத்திரை நல்லபடியாக அமைந்திட நண்பர்களின் வாழ்த்தை வேண்டுகிறேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
17 ஜூலை, 2015, முற்பகல் 5:20 ·
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக