கடவுளைக் கண்டவர் -
பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம். குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.
அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் ..... இன்று 41 ஆவது நாள், ஆடி 2 ( 18.07.2017) செவ்வாய்க் கிழமை.
அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் ..... இன்று 41 ஆவது நாள், ஆடி 2 ( 18.07.2017) செவ்வாய்க் கிழமை.
வழியில் திருக்காட்டுப்பள்ளி யில் பழனியாண்டவரை நேரில் கண்டவரைக் கண்டோம்.
D. நாகராசன் ஐயா அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார். இவர் பள்ளிப் பருவத்தில் பழனிக்குப் பாதயாத்திரை சென்றுள்ளார். வழியில் உடன்வந்தவர்களைத் தவறவிட்டுவிட்டுத் தனி ஒருவராகப் பாதையாத்திரை மேற்கொண்டுள்ளார். பயமும் பசியும் வருத்தியுள்ளன. அருள்மிகு பழனி பாலதண்டயுதபாணியை வேண்டிக் கொண்டு சாலையோரம் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்க்கும்போது, இவருக்கு அருகில் ஒரு சிறுவன் கையில் ஒரு சிறு வேலுடன் படுத்திருந்துள்ளான். இவர் எழுந்திடும்போது அந்தச் சிறுவனும் எழுந்துள்ளான். இவர் அந்தச் சிறுவனிடம், நீ யாரப்பா, என்னருகில் வந்து ஏன் படுத்துள்ளாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன், நான் பழனிக்குச் செல்கிறேன். வழியில் நீங்கள் ஒண்டியாகப் படுத்துக் கிடந்தீர்கள், ஆதரவாக நானும் படுத்துத் தூங்கினேன் என்று கூறியுள்ளான்.
உனக்குப் பழனி செல்லப் பாதை தெரியுமா? என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவனும் சரி யென்று கூறி இவரைப் பழனிவரை அழைத்துச் சென்றுள்ளான். பழனி ஊர் எல்லையை அடைந்ததும், இந்த இடத்தில் உன்னுடன் வந்தவர்கள் தங்கியுள்ளார்களா? எனப் பார்த்து அவர்களுடன் சேர்ந்துகொள் எனக்கூறியுள்ளான்.
அந்தக் கூட்டத்தில் தேடிப்பார்த்த போது, இவருடன் வந்தவர்கள் இருந்துள்ளனர். வழிநெடுகத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாக அவர்களும் கூறி, இப்போதாவது ஒன்று சேர்ந்தோமே என மகிழ்ந்துள்ளனர். ஆனால் அந்தச் சிறுவனை மீண்டும் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
அருள்மிகு பழனியாண்டவரே நேரில் வந்து, யாத்திரை முழுவதும் தன்னுடன் பயணித்ததாகவும், இன்றளவும் தனக்கு நல்லாசிகள் வழங்கி வருவதாகவும், பழனியாண்டவனே எனது கண்கண்ட கடவுள் என்றும் மனம் நெகிழ்ந்து கூறினார்.
ஐயா நாகராசன் அவர்கள் கூறியதைக் கேட்டு எழுதுவது,
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக