காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 51ஆம் நாள் - ஆனி 31 (15.07.2014) செவ்வாய்க் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று
கர்னூல் ஊரில் உள்ள சுவாமி விவேகானந்தர் பள்ளிக்கூடத்தில் வந்து தங்கியிருந்தோம்.
இன்று யாத்திரையில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நாள்.
அதிகாலை மணி 2.25க்கு யாத்திரிகர் எழுந்துவிட்டோம். மின்சாரம் இல்லை. யாத்திரிகர்கள் 3.20 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு பாதயாத்திரை புறப்பட்டோம்.
6.50 க்கு ஜலபுரம் என்ற ஊர் அருகே பெட்ரோல்பங்கின் எதிர்புறம் சாலையோரம்
அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
7.00 am
தேசிய நெடுஞ்சாலை யில் நீண்ட தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் ஊர்கள் எதையும் காணமுடிய வில்லை, வியப்பாக இருந்தது. தென்னாடு நோக்கிப் படையெடுத்த அன்னியப்படையினர் இந்தச் சாலைவழியாகச் செல்லும்போது, கிராம மக்களைப் பிடித்து அடிமைகளாக மாற்றிப் படைகளுக்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்ய வைத்தனராம். அதனால் சாலையோரம் இருந்த கிராமங்கள் எல்லாவற்றையும் காலிசெய்து சாலையிலிருந்து சுமார் 4 அல்லது 5 கி.மீ தொலைவில் அமைத்துக் கொண்டனராம். இதனால் இந்தப் பகுதியில் சாலையோரம் கிராமங்கள் ஏதும் கிடையாது என்று சொன்னார்கள்.
காசிஸ்ரீ சிவப்பா (29) அவர்களுக்குக் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார்.
காசிஸ்ரீ சிவப்பா (29) அவர்களுக்குக் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார்.
10.40 க்குகோதண்டபுரம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம். ஊரைக் கடந்துசென்றதும் சிறிது தொலைவில் சாலையோரம் அரிசி ஆலை ஒன்று இருந்தது. அங்கு சென்று தங்கினோம். அனைவருக்கும் பீன்ஸ் சூப் வழங்கப்பட்டது. யாத்திரிகர் அனைவரும் விரும்பி கூடுதலாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர்.
அபலைப் பெண் - அப்போது, ஒரு பெண் 4 வயது மகனுடன் அங்கே இருந்தார். தமிழ் நன்றாகப் பேசினார். தான் வேடசந்தூர் என்றும் , தனது கணவன் இந்த ஊரில் வேலை பார்ப்பதற்காக வந்துள்ளார் என்றும், அவரைத் தேடிவந்ததாகவும் சொன்னார். ஆனால் அவர் இங்கு வேலை கிடைக்காத காரணத்தால் ஈரோடு சென்று விட்டதாக கூறுகின்றனர். தேடிவந்த கணவர் இல்லாத காரணத்தின்ல், திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறி அந்தப் பெண் கண்ணீர் வடித்தார். குருசாமி அவர்கள், அந்தப் பெண்ணிற்கும் அவளது மகனுக்கும் ரொட்டி யும் பீன்ஸ்சூப்பும் கொடுக்கச் செய்தார். யாத்திரிகர் தங்களால் இயன்ற பணத்தை வழங்கினார்கள். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஓய்வு.
மதிய உணவு.
மதியம் 2.30க்கு குருஜி யாத்திரை வழிபாட்டைத் துவக்கினார். வழிபாடு முடிந்ததும் யாத்திரையைத் தொடங்கினோம்.
மாலை 4.50 க்கு பீச்பள்ளி என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்தோம். இங்கு தங்குவதற்கு இரண்டு சிறிய அறைகள் ஒதுக்கிக் கொடுத்தனர். ஒரு அறைக்குள் நான்குபேர்களுக்கு மேல் தங்க இயலாது.
4.53 pm
இதனால், கிருஷ்ணா நதியின் தென்கரையில் ஆற்றங்கரையோரம் உள்ள சரசுவதி கோயிலில் சென்று தங்கலாம் எனக்கூறி, அங்கே சென்று விசாரித்தனர். அங்கே யிருந்த நான்கு அறைகளை யாத்திரிகர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்தனர். மேலும் சமையல் செய்வதற்கும் வசதியான சமையல்கூடம் இருந்தது.
எனவே மிகவும் வசதியாகச் சரசுவதி கோயிலில் தங்கினோம். யாத்திரிகர் அனைவரும் மிகவும் அசதியாக இருந்தனர்.
https://goo.gl/maps/69tcQ5LjzhEmvnuv8
இன்றைய பயணம் சுமார் 50 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக