குரு பூர்ணிமா -
இந்த நன்னாளில் பகலில் குருவைக் கண்டு வணங்கிடுவோம்.
இரவில் பூர்ண நிலவையும், பூர்ண குருவையும்
விண்ணில் கண்டு மகிழ்ந்திடுவோம்.
ஆனி 21 (ஜூலை 5, 2020) ஞாயிற்றுக் கிழமை குருபூர்ணிமா நாளாகும். இந்நாளில் ஒவ்வொருவரும் அவரவர் குருசாமிகளை நேரில் கண்டு வணங்கிக் கொள்வது சிறப்புடையது.
இன்று பூரணை (பௌர்ணமி). மாலை நேரத்தில் மேற்கே சூரியன் மறைந்தவுடன் கிழக்கே பூரணச் சந்திரன் மிகவும் ஒளிவீசித் தோன்றுவதைக் காணலாம். சந்திரனுக்கு அருகே மிகவும் பிரகாசமான நட்சத்திரம் ஒன்றையும் காணலாம். இந்த நட்சத்திரத்திற்கும் சற்று கீழே (அல்லது கிழக்கே) சற்று குறைவான ஒளியுடைய நட்சத்திரம் ஒன்றையும் காணலாம்.
இந்த இரண்டு நட்சத்திரங்களும் மற்றபிற நட்சத்திரங்களைப் போன்று மினுமினுக்காமல் (will not twinkle) மிகவும் பிரகாசமாகத் திடமான ஒளியுடன் தெரியும். உண்மையில் இவை இரண்டும் நட்சத்திரங்கள் அல்ல. இவை கிரகங்கள் ஆகும். சந்திரனுக்கு மிகவும் அருகே நன்கு பிரகாரசமாகத் தெரிவது வியாழன் கோள் (கிரகம்) ஆகும். அதற்கு அருகே சற்று மங்கலான ஒளியுடன் தெரிவது சனிக் கோள் (கிரகம்) ஆகும்.
பூரணை (பௌர்ணமி) - 30 நாட்களுக்கு ஒரு முறை சூரியனுக்கு நேர் எதிரே சந்திரன் வரும். இவ்வாறு வரும்போது, சூரியஒளி சந்திரனில்படும் பகுதி முழுவதையும் நம்மால் காண முடியும். எனவே ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், சந்திரன் ஒரு முழுவட்ட நிலைவாகப், பூரணச் சந்திரனாக, முழுமதியாகத் தெரியும்.
இதைப் போன்றே, வருடத்தில் ஒருமுறை, வியாழன் (குரு) கோளும் சூரியனுக்கு நேர் எதிரிரே வரும். அப்போது வியாழனும் பௌர்ணமி நிலவைப் போன்று முழுவட்டமாகத் தெரியும். இதைத் தொலைநோக்கி அல்லது பைனாக்குலர் வழியாகப் பார்த்தால் மிகவும் அருமையாகத் தெரியும்.
இன்றைய சிறப்பு -
இன்று பூரணச் சந்திரனும், பூரணை வியாழனும் அருகருகே உள்ளன. இவற்றை நாம் நமது வெறும் கண்களால் காணலாம். இவற்றின் அருகே சனிக்கோள் இருப்பதையும் வெறும் கண்களால் காணலாம். இந்த அமைப்பை இரவு முழுவதும் காணலாம். அதிலும் குறிப்பாக இரவு மணி 10.00 அளவில் சந்திரனையும் குருவையும் அருகருகே காணலாம்.
குரு பூர்ணிமா (Guru Purnima) - ஒவ்வொரு வருடமும் பூரண குருவுடன் (வியாழனுடன்) பூரணச் சந்திரன் சேர்ந்திருக்கும் பௌர்ணமி நாளில், ஒவ்வொருவரும் அவரவர் ஆசிரியர்களை அல்லது குருசாமிகளை வணங்கி வழிபாடு செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாழ பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.
இன்று ஆனி 21 (05.07.2020) ஞாயிற்றுக் கிழமை, சுப ஓரைகள் காலை மணிமுதல் 7.00 -10.00வரை , 11.00முதல் - 12.00வரை, மாலை மணி 2.00முதல் - 4.30வரை உள்ளன. இந்த நல்ல நேரத்தில் அவரவர் ஆசிரியர்களிடமோ குருசாமிகளிடமோ நல்லாசிகள் பெறுவது சிறப்பா வாழ்வை அமைத்துக் கொடுக்கும். குரு பூர்ணிமா நன்னாளில் பகலில் குருசாமியைக் கண்டு வணங்கிடுவோம். இரவில் பூர்ண நிலவையும், பூர்ண குருவையும் விண்ணில் கண்டு மகிழ்ந்திடுவோம். கொரோனா ஊரடங்கு உள்ளதால், நேரில் குருநாதரைச் சந்திக்க இயலாதவர்கள் தொலைபேசி வழியாகப் பேசி ஆசிபெறலாம். மிகவும் பக்தியுடன் இன்று குருநாதர் சொல்லும் வழிகாட்டுதலைக் கேட்டுநடந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது திண்ணம்.
குருவை வணங்குவோம், கோடி நன்மைகள் பெறுவோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக