காசிக்கு நடக்கும்போது
நம்பமுடியாதபடி ஒன்று நடந்தது
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. மொத்தம் 110 நாட்களில், 7 மாநிலங்களின் வழியாக 2464 கி.மீ. பயணம் செய்து காசிக்குச் செல்வதாகத் திட்டம். இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,
இன்று யாத்திரையில் 62ஆவது நாள், ஆடி 10 (26.07.2014) சனிக்கிழமை -
ஆடி அமாவாசை.
துப்ரான் ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.(Toopran,Tupran తూప్రాన్ Telangana 502334)
துப்ரானில் வசித்து வரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர்களில் ஒருவர் யாத்திரிகர்களை வரவேற்றேர்.
புதிதாக ஒரு வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இனிமேல்தான் கிரஹகப் பிரவேசம் வைக்க வேண்டும்.
அங்கே யாத்திரிகர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் உள்ளன.
கிரஹகப்பிரவேசம் செய்வதற்கு முன்பு புதிய வீட்டில் தங்குவீர்களா? எனக் கேட்டார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் அதற்கு இசைவு தெரிவித்தார்.
உடனே அந்த அன்பரும் பெரிதும் மகிழ்ந்து, அவர் கட்டி முடித்துள்ள புதிய வீட்டிற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்றார்.
குருசாமியும் யாத்திரிகர்களும், ஊரைவிட்டு ஒதுங்கியுள்ள அந்தப் புதிய வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.
அந்த புதிய வீட்டின் வாயிலில் நின்றுகொண்டு, அந்த அன்பரும் அவரது மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கி வரவேற்றனர்.
குருசாமி அவர்களை ஆசிர்வதித்தார்.
இன்று “ஆடி அமாவாசை, இன்னாரென அறியப்படாத, யாரென்று அறியமுடியாத ‘அதிதி’ ஒருவருக்கு அன்னதானம் அளித்தால் சிறப்பு” என அந்தத் தம்பதியரிடம் குருசாமி சொன்னார்.
ஊருக்குப் புறத்தே புதிதாகப் பிளாட் போடப்பட்டு வீடு கட்டியுள்ளோம்.
வேறு பிற வீடுகள் ஏதும் இப்போது அருகில் இல்லை.
வெயிலும் கடுமையாகச் சுட்டெரித்துக் கொண்டுள்ளது.
எனவே இன்று யாரும் இந்தப் புதிய வீட்டிற்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.
அதிதிக்கு எங்கே போவது? என்று அந்த அன்பர் குருசாமியிடம் சொல்லி வருத்தப்பட்டார்.
மதிய சாப்பாட்டிற்குச் சமையல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
யாத்திரிகர்கள் அவரவருக்குக் கிடைத்த இடங்களில் படுத்து ஓய்வு எடுத்தனர்.
சிலர் மின்மோட்டாரைப் போட்டு, சீறிப் பாய்ந்த தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.
மதியம், சாப்பாட்டு நேரம் ஆகிவிட்டது. சாப்பிட வாருங்கள் என அழைத்தனர்.
யாத்திரிகர்கள் அனைவரும் மதிய உணவிற்காக வந்து, குருசாமியை அடுத்து வரிசையாக அமர்ந்தனர்.
அனைவருக்கும் உணவு பரிமாறிப்பட்டது.
குருசாமி அவர்கள் ஒவ்வொரு தெய்வங்களின் பெயராகச் சொல்லிவர, யாத்திரிகர்கள் “அரோகரா” என்று சொல்லி வழிபாடு செய்தனர்.
வழிபாடு முடிந்ததும், சாப்பிடத் துவங்கும் நேரத்தில்,
மிகவும் கிழித்த, மிகவும் அழுக்கான சட்டையுடன் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒருவரைக் குருசாமி அவர்கள் பார்த்து விட்டார்.
உடனே, “அதோ சாலையில் நடந்து செல்லும் அந்த அதிதியை அழைத்து வாருங்கள்” எனச் சொன்னார்.
அந்த அதிதியோ சுட்டெரிக்கும் அந்த உச்சி வெயிலில், மேற்கே, வேகவேகமாகச் சென்று கொண்டிருந்தார்.
ஆனாலும் அன்பரின் மனைவியோ மிகவும் வேகமாக ஓடிச் சென்று, அவர் முன்நின்று, அவரைச் சாப்பிட வருமாறு அழைத்தார்.
அழைப்பை ஏற்றுக் கொண்ட, அந்த அதிதியும் சாப்பிட வந்தார்.
பழனி சித்தரைப் போன்றே அவர் காட்சியளித்தார்.
சம்மணம் கூட்டி உட்கார்ந்தார்.
மதியஉணவு மிகவும் சூடாக இருந்தது.
ஆனாலும் அதிதிக்குச் சூடு சொரணை இருந்ததாகவே தெரியவில்லை.
அப்படியே சுடச்சுடச் சாப்பிட்டார்.
அந்த அதிதி சாப்பிடும்போது, அவர் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன்.
அதிதி ஏதும் பேசவே இல்லை.
சாப்பிட்டு முடித்தவுடன், உணவு அளித்த அந்தத் தம்பதியரைக் கைகளால் ஆசிர்வதித்தார்.
அவ்வளவுதான் பழைய வேகத்தில் வேகவேகமாக நடந்து சென்றுவிட்டார்.
இந்த நிகழ்ச்சி முழுவதும் மிகவும் வேகவேகமாக விறுவிறுப்பாக நடைபெற்றது.
மாடியில் உள்ள அறையில், பேட்டரி சார்ஸ் போட்டிருந்த அலைபேசியை எடுத்துப் படம் எடுக்க என்னால் இயலாமல் போனது.
எனவே பழனி சித்தரின் படத்தை இணைத்துள்ளேன்.
அந்த அதிதி சம்மணம் கூட்டி உட்கார்ந்து மிச்சம் வைக்காமல், சுடச்சுட உணவு முழுவதையும் திருப்தியாக உண்டதைக் கண்ட யாத்திரிகர் அனைவருக்கும் நெகிழ்ந்து வியந்து போனோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வீட்டிற்குள் நுழைத்தவுடன் அருளிச் செய்தபடி,
ஆடி அமாவாசை நாளான இன்று அதிதி ஒருவர் வந்து மதிய உணவு சாப்பிட்டுச் சென்ற இந்த நிகழ்ச்சியால்,
அந்தத் தம்பதியர் பெரிதும் மகிழ்ந்து இருந்தனர்.
காலையில் குருசாமி சொன்னது, மதியத்தில் உண்மையாகவே நடந்தது.
இவ்வாறு நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
இதற்காக அந்த தம்பதியர் குருசாமி அவர்களைப் பெரிதும் போற்றி வணங்கினர்.
இது உங்களது முன்னோர்களின் நல்லாசியால் விளைந்தது, இனிமேல் உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும், உங்களது பெண்குழந்தைகள் இருவரும் மருத்தும்படித்துச் சிறந்த மருத்துவர் ஆவார்கள் எனக்கூறி குருசாமி அவர்களை ஆசிர்வதித்தார்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கூடுதலான தகவல்கள் இணைப்பில் உள்ளன.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/26072014-62-10.html
கூடுதலான தகவல்கள் இணைப்பில் உள்ளன.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/26072014-62-10.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக