வெள்ளி, 3 ஜூலை, 2020

04.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 27ஆவது நாள், ஆனி 20

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  27ஆவது நாள், ஆனி 20 (04.07.2017) செவ்வாய்க் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று திருவேடகம் வந்து சேர்ந்தோம்.  திருவேடகம் சொக்கலிங்கம் சுவாமிகள் மடத்தில் தங்கல். 
இன்று முழுதும் ஓய்வு.

ஸ்ரீ சொக்கலிங்க சுவாமிகள் மலேசியாவில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் திருவேடகம் கோயில் திருப்பணிக்கே செலவு செய்துள்ளார் என்றும்,  தனது ஆயுட்காலம் முடியும்வரை இங்கேயே தங்கியிருந்து சமாதி அடைந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.  சமாதியில் சிவலிங்கம் வைத்துக் கோயிலாகக் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.  ஸ்ரீ சொக்கலிங்க சுவாமிகளின் சமாதி அமைந்துள்ள இடத்திலேயே அவரது பெயரால் மடம் உள்ளது.


ஸ்ரீ சொக்கலிங்க சுவாமிகளின் மடத்தில் காலை மணி 5.00க்குக் காலைநேர வழிபாட்டை முடித்துக் கொண்டு 6.30  மணிக்கு திருவேடகம் அருள்மிகு ஏலவார்குழலி உடனமர் ஏடகநாதர் ஆலயம் சென்று திருப்பள்ளியெழுச்சி வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெற்றோம்.

26 வயதிலிருந்து முரசொலி வாசித்து வந்த காசிஸ்ரீ பஞ்சவர்ணம் அவர்கள் 62ஆவது வயதில் திருவேடகம் கல்வெட்டை வாசிக்கிறார்.  அவரது கல்வெட்டு வாசிப்பைக் கண்டு மற்றபிற யாத்திரிகர் அனைவரும் வியந்து போனோம்.
கோயில் இராசகோபுரக் கட்டுமானத்திலும் கல்வெட்டுச் செய்திகள் உள்ளன.   கோயிலின் உள்ளே தனியாக உள்ள ஒரு தூணிலும் எழுத்துக்கள் இருப்பதைக் காண முடிந்தது.

திருவேடகம் அருள்மிகு ஏலவார்குழலி உடனாய திரு ஏடகநாதசுவாமி கோயிலுக்குத் தேவகோட்டை நகரத்தார் திருப்பணிகள் பல செய்து குடுமுழுக்கு நடத்தி வருகின்றனர்.   தேவகோட்டை திரு.உ.ராம.மெ.சு. சேவுகன் செட்டியார் அவர்கள், திரு. உ.ராம.மெ.சுப. சேவுகன் செட்டியார் அவர்கள், திரு உ.ராம.மெ.சு.மெய்யப்ப செட்டியார் அவர்கள் ஆகிய மூன்று குடும்பத்தார்களால் இத் திருத்தலம் சீரிய முறையில் திருப்பணி செய்யப்பெற்று பிரமோதூத வருடம் வைகாசி மாதம் 26ஆம் நாள் (08.06.1930) ஞாயிற்றுக்கிழமை அன்று அட்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தேவகோட்டை திரு. உ.ராம. மெ. S.S.S.சுப்பிரமணியன் செட்டியார் அவர்கள் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து, சாதாரண ஆண்டு ஆனித் திங்கள் 26ஆம் நாள் (10.07.1970) வெள்ளிக்கிழமை அட்டபந்தன மகாகும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தேவகோட்டை திரு.உ.ராம.மெ.சு. சேவுகன் செட்டியார் குடும்பத்தார், திரு உ.ராம.மெ.சுப.சேவுகன் செட்டியார் குடும்பத்தார், திரு.உ.ராம.மெ.சு.மெய்யப்ப செட்டியார் குடும்பத்தார் இணைந்து திருப்பணிகள் செய்து விஷீ ஆண்டு ஆனித் திங்கள் 18ஆம் நாள் (02.07.2001) திங்கள் கிழமை அன்று குடமுழுக்கு நடத்தியுள்ளனர். திரு.எஸ்.எல். சேவுகன் செட்டியார் அவர்கள் பரம்பரை அறங்காவலர்.

இந்த ஆண்டு 29.06.2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.  மண்டலாபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  குடமுழுக்கு நடைபெற்றுச் சரியாக 7நாட்கள் கழித்து யாத்திரிகர்கள் கோயில் வழிபாடு செய்து கொண்டோம். 


கோயிலில் வழிபாடு முடித்துக் கொண்டு அருள்மிகு சட்டநாதச் சித்தர் ஜீவசமாதிக்குச் சென்று வழிபட்டோம்.  சித்தரைப் பற்றிய கதைகள் பலவற்றையும் கேட்டறிந்து வியந்தோம்.  பதினெட்டுச் சித்தர்களில் ஒருவரான சட்டநாதர் 400 ஆண்டுகளுக்கு முன்பு திருவேடகம் வந்து சமாதியில் அமர்ந்ததாகக்  கூறுகின்றனர். சட்டநாதர் குருபூசை ஆவணி 7ஆம் நாளும், சாமி புறப்பாடு தை முதல்நாளும், சித்திரை முதல்நாளும் நடைபெறுகின்றன.  
சித்தரை வழிபட்ட பின்னர், அருகில் உள்ள அருள்மிகு ஐயன் முத்தையா சீலைக்காரி அம்மன், சங்கிலிக் கருப்பு முதலான தெய்வங்களையும் வணங்கிக் கொண்டோம்.



அங்கிருந்து அருள்மிகு சீரடி சாய்பாபா ஆலயம் சென்று வழிபட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டோம். பாபாவின் திருவருள் பற்றியும் அவருக்குப் பாபா வழங்கிய அருளாசிகள் பற்றியும் கோயில் நிர்வாகி பெரிதும் எடுத்துக் கூறினார்.
காலை உணவு.
இன்று முழுவதும் ஓய்வு.
மடத்தில் இரவு வழிபாடு.
இரவு உணவு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக