ஞாயிறு, 5 ஜூலை, 2020

05.07.2014 காசி பாதயாத்திரை - 41ஆம் நாள் ஆனி 21

பயணக் கட்டுரை -
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 41ஆம் நாள் - ஆனி 21 (05.07.2014) சனிக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பாலசமுத்திரம் வந்து சேர்ந்து ஜில்லா பரிசாத் மேல்நிலைப் பள்ளியில் (Zilla Parishad High School) தங்கி இருந்தோம்.

இன்று அதிகாலை 3.00 மணிக்கு தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.


5.41 am

காலை மணி 6.45 அளவில், நலகொண்டரயானபள்ளி (Nallagondrayanapalli) என்ற ஊரின் அருகே சென்று கொண்டிருக்கும்போது,  நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த சிலர் எதிரே வந்தனர்.   அவர்கள் சிறிது நேரம் நின்று,  குருசாமி அவர்களிடம் யாத்திரை பற்றிக் கேட்டறிந்தனர்.  அவர்களுள் ஒருவரான அந்தக் கிராமத் தலைவரும் இருந்தார்.  அவர்  கடந்த ஆண்டும் இதே இடத்தில் இதேநேரம் குருசாமியைச் சந்தித்து ஆசி பெற்றதை நினைவு கூர்ந்து, குருசாமியின் கால்கள் இரண்டையும் கட்டிப் பிடித்துக் கொண்டு, தனது தலையைக் குருசாமியின் பாதங்களில் வைத்துப் பெரிதும் வணங்கிக் கிடந்தார்.  குருசாமி அவர்களும் அவர்க அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் கொடுத்தார்.


7.12 am


7.39 am

7.57 am
பெனுகொண்டா R.T.O செக்போஸ்ட்டில் காலை மணி 8.00 அளவில் காலைஉணவு.  சிறிது நேரம் சென்றவுடன் யாத்திரையைத் தொடர்ந்தோம்.  மற்றபிற யாத்திரிகர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் நடக்கத் தொடங்கினர்.  என்னால் அவர்களைப்போல் அவ்வளவு வேகமாக நடக்க இயலவில்லை.  அனைவருக்கும் கடைசியாக நடந்து சென்று கொண்டிருந்தேன்.  யாரோ கூப்பிடுவது போன்ற சப்தம். திரும்பிப் பார்த்தால் எல்லோருக்கும் முன்னால் செல்லும் காசிஸ்ரீ சிவாப்பா எனக்கும் பின்னால் வந்து கொண்டிருந்தார்.  அவருக்காகச் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தேன்.  அவர் வந்து சேர்ந்ததும் அதிர்ச்சியாக ஏதேதோ தெலுங்கில் சொன்னார்.  காலை உணவு உண்ணும்போது, உறவினர்களிடம் பேசிவிட்டுக் கையில் வைத்திருந்த அவரது அலைபேசி (செல்போன்) காணாமல் போய்விட்டதாம்.  இதைக் கேட்ட நானும் எனது அலைபேசியில் இருந்து அவரது எண்ணை அழைத்துப் பார்த்தேன். அலைபேசியில் மணி அடிக்கிறது,  ஆனால் யாரும் எடுத்துப் பேசவில்லை.  எனவே சாப்பிட்ட இடத்தில்தான் செல்போன் கிடக்கிறது என்று சிவாப்பா சொன்னார். எனவே இருவரும் சாப்பிட்ட இடத்திற்குத் திரும்பிச் சென்றோம்.   நாங்கள் இருவரும் அலைபேசியைத் தேடிச் செல்வதால்,  நாங்கள் வருவதற்குக் காலதாமதம் ஆகும் என்று காசிஸ்ரீ அங்கமுத்துசாமி அவர்களிடம் அலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு ஆர்.டி.ஓ. அலுவக வளாகத்திற்குச் சென்று சிவாப்பாவின் அலைபேசியைத் தேடிப் பார்த்தோம்.  இப்போதும் மணி அடிக்கிறது. ஆனால் யாரும் எடுக்க வில்லை.  சற்று முன் ஒரு லாரி வந்து சென்றது என்றும் ஒருவேளை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தின்ர் சொன்னார்கள்.  லாரியில் சென்றவர்கள் எடுத்திருந்தால் எப்படியும் உங்களது அலைபேசியைப் பெற்றுத்தருகிறோம் என்று உறுதி கூறினர்.  எங்களுடன் தொடர்பு கொள்வதற்காக எனது அலைபேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டனர்.  அவர்களிடம் சிவாப்பா அதிகநேரம் பேசிக் கொண்டிருந்தார்.  

இதற்குள் குருசாமி அவர்கள் அலைபேசியில் என்னை அழைத்தார்.  “ஏன் காலதாமதம் செய்கின்றீர்கள்?  உங்களுக்காக அத்தனை யாத்திரிகர்களும் காத்துக் கிடக்கிறோம்” என்று சற்று கோபமாகப் பேசினார்.   அவரிடம் நடந்தனவற்றை யெல்லாம் சொன்னேன்.  விரைவாகத் திரும்பி வரும்படி குருசாமி அவர்கள் சொன்னார்.  ஆனால் என்னால் அவ்வளவு விரைவாக நடக்க இயலவில்லை.  குருசாமி அவர்கள் அடிக்கடி அலைபேசியில் பேசிக் கொண்டே இருந்தார்.  விரைந்து வரும்படி சொல்லிக் கொண்டே இருந்தார்.

8.30 am


8.36 am

R.T.O செக்போஸ்ட்டில் பணியில் இருந்த அதிகாரிகள் சிவாப்பாவிடம் ஒரு பூசணிக்காய் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.  நானும் சிவாப்பாவும் சிறிது நேரத்தில் மற்ற பிற யாத்திரிகர்களுடன் சென்று சேர்ந்து விட்டோம்.   குருசாமி அவர்கள் தன்னிடம் இதுபற்றித் தகவல் ஏதும் செல்லவில்லையே என்று மிகவும் கோபித்துக் கொண்டார்.  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றேன் என்ற பதிலைக் குருசாமி அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை.  இனிமேல் எது நடந்தாலும் அவரிடம் (குருசாமியிடம்) சொல்லவேண்டும் என எங்கள் இருவருக்கும் அறிவுரை கூறினார்.

ஆனால் சிவாப்பாவின் முகம்தான் மிகவும் வாடிப் போயிருந்தது.  அந்த அலைபேசி புதியது. நேற்று முன்தினம்தான் அவரது நண்பர் திரு. ராமு அவர்கள் அவருக்குப் பரிசாக வழங்கி இருந்தார்.  காசியாத்திரையின் போது பயன்படுத்துவதற்காக புதிய சிம்கார்டுடன் (SIM card with Roaming facility) வாங்கிக் கொடுத்திருந்தார்.  இரண்டே நாளில் விலை கூடுதலான செல்லைபோனைத் தொலைத்துவிட்டது குறித்து சிவாப்பா பெரிதும் வருந்தினார்.  சாப்பிடும்போது கையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்தது எப்படிக் காணாமல் போனது? என்று மிகவும் வருந்தினார்.

9.08 am
சிவாப்பாவின் அலைபேசியைத் தேடி அலைந்த காரணத்தினால் சுமார் அரைமணி நேரம் கூடுதலானது.  வெயிலில் அனைவரும் காத்துக் கிடந்தனர்.  

9.10 am
பெனுகொண்டா சிவன்கோயில் அருகே உள்ள மண்டபம் போய்ச் சேர்ந்தோம்.
மண்டபத்தில் இருந்து கொண்டு சிவாப்பா அலைபேசியை அழைத்தால், இப்போதும் மணி அடிக்கிறது.  யாரும் எடுக்கவில்லை.  இதனால் அந்த அலைபேசியானது சாப்பிட்ட இடத்தில்தான் கிடக்கிறதோ? என்ற சந்தேகம் சிவாப்பாவிற்கு மீண்டும் வந்துவிட்டது.   அதைத்தான் நன்றாகத் தேடிப்பார்த்து விட்டோமே,  சாப்பிடும் இடத்தில் கிடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றேன்.  ஆனால் சிவாப்பாவின் வருத்தம் நீங்கவில்லை.  அந்த லாரி ஓட்டுநர்தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றார்.  பொறுமையாய் இரு, என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சிவாப்பாவினால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  

சிறிது நேரத்திற்குள் யாத்திரிகர் ஒருவர் சிவாப்பாவிடம் வந்து, அன்னதான வண்டியில் உள்ள எனது துண்டை எடுக்கப் போனேன்,  அப்போது அலைபேசி மணி அடித்தது,  வண்டிக்குள் அலைபேசி மணி அடிக்கிறதே, எனத் தேடிப்பார்த்தேன்.  அப்போது உனது பைக்குள் இருந்து மணிச் சத்தம் கேட்டது என்று கூறிக் கொண்டோ சிவாப்பாவிடம் அவரது அலைபேசியைக் கொடுத்தார்.

அந்த அலைபேசியைப் பார்த்ததும்தான் சிவாப்பாவிற்று முகம் மலர்ந்தது.  தன்னுடைய புதிய அலைபேசி தன்னிடம் வந்து சேர்ந்தது குறிந்து மிகவும் மகிழ்ந்தார்.  ஆனால் திரும்பத்திரும்பத் தான் சாப்பிடும் போது கையில் வைத்திருந்த அலைபேசி அந்த வண்டிக்குள் எப்படிப் சென்றது? என்று சந்தேகப்பட்டார்.  யாரோ யாத்திரிகர்களின் ஒருவர்தான் இவ்வாறு விளையாட்டாகச் செய்திருக்க வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தார்.  எது எப்படியோ, சிவாப்பாவின் அலைபேசி காணாமல் போனது கிடைத்தது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

பெனுகொண்டாவில் மதிய உணவு.  
அதன்பின்னர் மதியம் சுமார் 1.00 மணி அளவில் பாதயாத்திரை புறப்படத்  தயாரானோம்.  வழக்கமான வழிபாடுகளை முடித்துக் கொண்டு சுமார் 3.00 மணி அளவில் யாத்திரையைத் தொடர்ந்தோம்.  யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த அன்பரும் எங்களுடன் வழிபாட்டில் கலந்து கொண்டு எங்களை வழியனுப்பி வைத்தார்.   குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்த அடியாரை ஆசிர்வதித்தார்.

2.34 pm


2.54 pm


3.02 pm


3.08 pm
பெனுகொண்டா கோட்டை வாயிலில் நிருபர்கள் இருவர் வந்துநின்று, பாதயாத்திரை தொடர்பான செய்திகளைக் கேட்டறிந்து கொண்டனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்களை ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.





3.11 pm


3.03 pm

3.07 pm
காசிஸ்ரீ சிவாப்பாவிற்குப் புதிய அலைபேசி வாங்கிக் கொடுத்திருந்த அவரது  நண்பர் திரு ராமு அவர்கள் பெனுகொண்டா பேருந்து நிலையம் அருகே காத்திருந்தார்.   அவரிடம் சிவாப்பா நடந்தனவற்றை எடுத்துக் கூறினார்.  நண்பரிடம் விடைபெற்றுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

4.17 pm
4.29 pm


கொடுரூ செல்லும் வழியில் சாலைகள் சந்திப்பில் அமர்ந்து மாலைநேரத்தில் ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.


4.37 pm
5.06 pm
பள்ளி முடிந்து சிறுவர்களும் சிறுமிகளும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அவர்களிடம் சிறிது நேரம் பேசியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  தெலுங்கு தெரியாத காரணத்தினால் அதிகநேரம் பேச இயலாமல் போனது சிறிது வருத்தமாகவும் இருந்தது.



6.11 pm

5.20 pm

5.04 pm



கொடுஊரை மையமாகக் கொண்டு தெற்கிலும் வடக்கிலும் சுமார் 30 கி.மீ. நீளமும், கிழக்கிலும் மேற்கிலும் சுமார் 10 கி.மீ. அகலமும், சுமார் 80கி.மீ. சுற்றளவிற்குக் குன்றுகளின் மேல் கற்பாறைகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டது போன்று உள்ளன.  இதனால் இது பண்டைக்காலத்தில் பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய கோட்டை அரணாக இருந்திருக்க வேண்டும்.  பிரளயத்தினால் ஏற்பட்ட பெருங்கடல்கோளால் இந்தக் கோட்டை அழிந்திருக்கலாம் என்ற சிந்தனையுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன்.


6.26 pm


6.32 pm
மாலை மணி 6.30 அளவில் கொடுஊரு (Gutturu) வந்து சேர்ந்தோம்.  ஊரார் வரவேற்று, ஊரின் நடுவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.  பள்ளி ஆசிரியர்களும் வந்திருந்து தேவையான தண்ணீர் வசதி செய்து கொடுத்தனர்.  அன்றைய தினம் இரவு அந்த ஊரில் திருவிழா ஒன்று நடைபெற்றது.  மிகவும் அசதியாக இருந்த காரணத்தினாலும்,  தெலுங்கு தெரியாத காரணத்தினாலும் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை.

6.38 pm


https://goo.gl/maps/hEs26g9VSRTQe3K1A
இன்றைய பயணம் சுமார் 33 கி.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக